தமிழ் ஊடகத்திற்கான ‘ராம்நாத் கோயங்கா’ சிறப்பு விருது

திரு.மு.குணசேகரன்
திரு.மு.குணசேகரன்

ஒக்கி குறித்த பதிவுக்காக, தமிழ் ஊடகத்திற்கான ‘ராம்நாத் கோயங்கா’ இதழியல் சிறப்பு விருது நியூஸ் 18 தமிழ்நாடு முதன்மை ஆசிரியர் திரு.மு.குணசேகரன் அவர்களுக்கு கிடைத்துள்ளது.  

அப்படி என்னதான் செய்தார் குணசேகரன்? 

2017,  நவம்பர் மாத இறுதியில் குமரியைப் பதம் பார்த்த ஓகி புயலின் பேரழிவு முன்னெப்போதும் இந்திய துணைக் கண்டம் கண்டறியாதது. ஒரு ஒழுங்கமைப்பட்ட இராணுவத்தைப் போல் இயங்கியது நியூஸ் 18 தமிழ் நாடு ஊடகம்.  கிட்டத்தட்ட 3000 மீனவர்களைக் காணவில்லை என்பதை முதலில் ப்ரேக்கிங் செய்தியாக அறிவித்தது முதல், மதுரை, திருச்சி, நெல்லை மண்டல செய்தியாளர்களை ஒருங்கிணைத்து செய்திகளை முதல் கட்டமாக விரைந்து வழங்க அசுர வேகத்தில் இயங்கினார். அடுத்த நாள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அவர் நேரடியாக களத்தில் இறங்கினார். மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, தூத்தூர் ஆகிய இடங்களில் களத்தில் இருந்து காலத்தின் குரலை பதிவு செய்தார்.  இதற்கிடையில் எழுத்தாளர் ஜோடி குரூஸின் பேட்டியையும் குணசேகரன் பதிவு செய்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேர்காணல் கண்டு துணிந்து அவரிடம் ஓகி புயலின் அரசின் தவறுகளைக் கேள்வி கேட்டார். அந்த ஒரு வாரமும் சென்னை, திருவனந்தபுரம் என்று மாறி மாறி பறந்து கொண்டே இருந்தார்.  காரணம் குணசேகரன் நிகழ்த்திய அசுரவேக செயல்திறனும் உழைப்புமே. கிட்டத்தட்ட எல்லா ஊர்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களிடம் பேசினார். தனக்குத் தெரிந்த அளவில் எல்லா இடங்களிலும் நிலைமையின் தீவிரத்தை உணர்த்திக் கொண்டே இருந்தார். அரசு செயல்பட்டே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது. வள்ளவிளையில் காலத்தின் குரல் நடத்தும் முன்பு, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒரு ரிப்போர்ட்டரைப் போல ஆன் தி ஸ்பாட் ரிப்போர்ட்டிங் செய்தார். வறீதையாவை அவர்கள் இவ்வாறு கூறுகிறார்  நியூஸ் 18 தொலைக்காட்சி இல்லை என்றால் மிகப் பெரிய படுகொலை ஒன்று வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைக்கப்பட்டிருக்கும். 

விருதுக்காக 650 பேரின் ஊடகப் பணிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் முதல் முதலாக தமிழ் நாட்டு ஊடகம் ஒன்றுக்காக மு. குணசேகரன் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, மூத்த பத்திரிகையாளர், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் அடங்கிய குழு கடும் பரிசீலனக்கு பிறகு விருது வழங்கி இருக்கிறது.  அரசியல், பொருளாதாரம் போன்ற அழுத்தங்களையும் மீறி சுதந்திரமாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஓகி புயலின் போது மட்டுமில்லாமல், நீட் அனிதா தற்கொலை, வர்தா புயல்,  நீட் தேர்வு சிக்கல், கஜா புயல், கதிராமங்கலம், நெடுவாசல் போன்ற அனைத்துப் பிரச்சினைகளிலும் மக்களின் உடன் இருந்து பயணிக்கும் நியூஸ் 18 தமிழ்நாடுக்கும் அதன் முதன்மை ஆசிரியர் குணசேகர் அவர்களுக்கும் தூத்தூர் பகுதி மக்கள் சார்பில்  வாழ்த்துக்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*