கடற்கரை இலக்கிய வட்டம் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் நடத்திய கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கவிதை

ஆரறிவார் இவர் சீர்…??

முக்குவப் புத்தகத்தின் 
முக்கிய முத்திரையாய் … 
முக்கடல் மீனவத்தின் 
மூத்தநல் பெருந்தகையாய்… 
மக்களின் மனமறிந்த 
பக்குவ மந்திரியாய்…. 
சித்திரப் புன்னகையால் 
சீர்புகழ்  பலவாய்த்த … 
“லூர்தம்மாள்”  சீமாட்டி 
வான்புகழ்  ஓங்கிடவே
வாழ்த்திசை யாத்திடுக 
மாக்கடல் வேட்டத்து 
மாந்தர்களே!
 
மணக்குடிப் பெருந்துறையில் 
பெருங்குடிச்  சீர்மரபில் 
பிறந்திட்ட சுடர்கொடியே!.. 
சிறந்தவர் “சைமன” வர் 
திருக்கரம் தனைப்பற்றி 
மணமுடித்(து) திருக்குடும்பம் 
வனைந்திட்ட வளர்மதியே!.. 
பக்திப் பண்பாட்டோடு 
புத்திப்பே ரழகினோடும் 
பூரணமான ஆரணங்கே!… 
ஆழிக் காய்ந்தாலும் 
அழியாது உன்நாமம் 
வாழியவே! 
 
கர்மத் தலைவனவன் 
காரியத் திருஅவையில்
சீரியக் கொள்கைக்காய்
கர்ஜனை செய்திட்ட 
ஏறொத்த பெருமகளே!… 
வாயற்ற ஏழையவன்
வேளைக்கு உணவுகொள்ள 
உறுதியேற்  றுழைத்திட்டப் 
பிழையில்லாப் பிறைநிலவே!… 
“உள்துறை” ஆட்சிதனில் 
நல்லறம்பல் புகுத்திட்டும்… 
“மீன்துறை” மந்திரியாய் 
மேன்மைகள் பல்புரிந்திட்டும்… 
ஆளுமைக்கோர் அரும்பொருளாய்
ஆடவர்க்(கு) நேரிணையாய் 
அருளாட்சி புரிந்திட்ட 
“அம்மையார்” லூர்துநாமம் 
வாழியவே!! 
 
மேட்டுக்குடி மக்கட்கு 
மட்டுமே   கிட்டிய 
ஏட்டுக்கல்வி தனைஏழை
வீட்டுக்கும் கொடுத்திட்ட 
“வீணை”யில்லாக்  கலைமகளே!… 
“ஆணை”பல போட்டு 
மேலைநாட்டுத் தொழில்நுட்பம்
ஏழை”நாட்டுப் படகிற்கும்”
எட்டிடச்செய்திட்ட 
எழிலுருவே!
வகைவகையாய் மீனினங்கள் 
அறிமுகம் செய்திட்ட மதிமுகமே!
“வசை”பாடி  பலர்உம்மை 
வருத்தத்தில் ஆழ்த்திடினும் 
“‘விசை’ப்படகு ஓட்டிய 
விளைநல்வீர மீனவளே”!.. 
வாழியவே!!! 
 
இப்படி இங்கனமோர்
முக்குவப் பெண்ணொருத்தி 
முத்தமிழ் நாட்டினையே 
பத்திரமாய் காத்தாள் என்பதையே
தந்திரமாய் மறைத்து
சரித்திரத்தை திரிக்கும் 
நரிநிகர் நாரதர்தம்
செவிப்பறை கிழிந்திடவே
பறைகொட்டி பாட்டிசைப்பீர் 
பாடுகடல் ஆடுகின்ற 
வேட்டுவ மீனவமே!
வாழிய “லூர்தம்மாமந்திரி” 
என்றே!!… 
தொபியாஸ் ஹெல்ஜின், ஹெலன் நகர்
தொபியாஸ் ஹெல்ஜின், ஹெலன் நகர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*