மீனவ மக்களை பழங்குடி இன பட்டியலில் சேர்த்திட தமிழகம் தழுவிய அரசியல் எழுச்சி பிரச்சாரம்

பூமியின் மேற்பரப்பில் 71 சதவீதம் சமுத்திரங்கள் உள்ளடக்கியதாக உள்ளது மற்றும் 97 சதவீதம் நீரைக் கொண்டுள்ளதாக இருக்கின்றது. இப்படி பரந்து விரிந்துகிடக்கும் கடலை நம்பி, பல கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் ஆடம்பரப் பொருள்கள் வரை கடல் வாரி வழங்கி வருகிறது. இதற்கிடையில், வரும் காலத்தில் மனித குலத்திற்கு தேவையான உணவில், 90 சதவிகிதம் கடலிலிருந்தே கிடைக்கப்பெறும் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். அத்தகைய கடல் உணவுகளை, மழை, வெயில், புயல் சுனாமி எனப்பாராது கரைக்குக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள் மீனவர்கள். அப்படிப்பட்ட மீனவர்களுக்கான நவம்பர் 21 ஆம் நாளை “மீனவர் தினம்” என்று உலகமெங்கும் உள்ள மீனவர்கள் அனுசரிக்கின்றனர். மீனவர்களுடைய மூல பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்ற அடிப்படையில் கடல்சார் மக்கள் நல சங்கமம்
( Maritime People’s Welfare Association ) அன்றைய தினத்தை மீனவர்களாகிய நாம் அரசியல் எழுச்சி நாளாக அனுசரிக்கவேண்டும் என தீர்மானித்துள்ளோம்.

இந்திய கடற்கரையான 7516 கி.மீட்டர் நீளத்தில் 1076 கி.மீட்டர் நீளமுடைய தமிழகம், நாட்டிலேயே இரண்டாவது கடல் வளத்தை கொண்டிருக்கக்கூடிய மாநிலமாகும். மேற்கண்ட இக்கடல் வளத்தை நம்பி 608 மீனவக் கிராமங்களும் 11 லட்சத்துக்கும் அதிகமான மீனவ குடும்பங்களும் உள்ளனர். சராசரியாக ஒவ்வொரு மீனவ கிராமமும் 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கடந்தாண்டு கணக்கின்படி சுமார் ஆறு லட்சம் டன் மீன்பிடிப்பு தமிழகத்தில் நடந்துள்ளது. தமிழகத்தில் அந்நியச் செலாவணியாக சுமார் ரூபாய் 5000 ஆயிரம் கோடி ஈட்டப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு மீனவர்கள் 2.3 லட்சத்துக்கும் அதிகமான மீனவ குடும்பங்களும் உள்ளனர். மீன் தொழில்சார்பு குடும்பங்கள் பல லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர் . நம் நாட்டின் வளர்ச்சி 5 – 7 சதவிகிதம் GDPயில் 1 சதவிகிதம் மீன்பிடிப்பு தொழில்சார்த்து உள்ளது. அதாவது 100க்கு 20 சதவிகிதம் உள்ளது .

நம் நாட்டின் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 1970-களில் நீலப்புரட்சித் திட்டம் என ஒன்றை மத்திய அரசு கொண்டுவந்தது. இத்திட்டத்தின்படி பல மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிமுக படுத்தியது குறிப்பாக விசைப்படகுகள் வாங்கக் கடனுதவி, டீசலுக்கு மானியம் போன்றவை அரசினால் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலகமய, தாராளமய தனியார்மய கொள்கை தீவிரமடைந்த சூழலில். பன்னாட்டு ஏகபோக முதலாளிகள் மற்றும் இந்நாட்டில் உள்ள பணியா, மார்வாடி கண்களை கடல் வளம் உறுத்தியது. இதன் விளைவாக பாய்மரப் படகுகள் உலாவந்த கடலில் பெரும் கப்பல்கள் அணிவகுத்தன, கொஞ்சம் கொஞ்சமாக மார்வாடி மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் வேட்டை காடாக கடல் மாறியது. மொத்த கடல் மீன் வளத்தில் 60 சதவிகிதம் சுரண்டப்பட்டுவிட்டது. கடலையே நம்பி இருந்த கடல்சார் பழங்குடியின மக்களின் கடலும் கடல்சார் நிலமும் பறிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவுக்குப் பின் மீனவர்களின் பாதுகாப்பு என்கிற பெயரில் குறிப்பாக கடற்கரை ஒழுங்குமுறை சட்டம் போன்ற சட்டங்களை இயற்றி மீனவ சமுதாய மக்களை அச்சுறுத்தி அவர்களின் கடற்கரையோர வாழும் உரிமையைப் பறித்ததுவிட்டு, பெரும்முதலாளிகளின் ரசாயன தொழிற்சாலைகள், உல்லாச விடுதிகள், ஆடம்பர சொகுசு பங்களாக்களை, கடற்கரையோரங்களில் அமைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

நம் மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள “புதிய தேசிய மீன்பிடி மசோதா 2019” முடக்கிப் போடப் போகின்றது.

இந்நிலையில் அரசு கொண்டுவந்துள்ள புதிய வரைவு மசோதா, விசைப்படகுகள் மற்றும் பாரம்பரியப் படகு வகைகளுக்கிடையே உள்ள பாரதூரமான வேறுபாடுகளையோ, அவற்றின் மீன்பிடித் திறன்களையோ கருத்தில் கொள்ளாமல் அனைத்தையும் “மீன்பிடிக் கலன்” என ஒரே வார்த்தையில் வரையறுத்து அனைவரையும் மீனவர்கள் என்று பொதுவில் வகைப்படுத்தி விதிமுறைகளையும் தண்டனைகளையும் வகுத்துள்ளது.

இச்சட்டப்படி எல்லா வகைப்படகுகளும் மத்திய அரசிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்கின்ற மோசமான சட்டம் வர இருக்கின்றது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட கல்வி. சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதாரத்தில் ஏற்றம் கண்ட மீனவர் சமூகம், சுதந்திரத்திற்கு பின்பு மத்திய மற்றும் மாநில ஆண்ட கட்சிகளும், ஆண்டு கொண்டு இருக்கின்ற கட்சிகளும் பல்வேறு மீனவ விரோத திட்டத்தை கொண்டுவந்ததினால் இன்று பல்வேறு துன்பத்திற்கு ஆளாவதை கண்கூடாக பார்த்தும் கேட்டும் வருகின்றோம். மீனவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநித்துவம் போன்ற உரிமைகள் கிடைக்க இச்சமூகத்தை பழங்குடி இனத்தில் சேர்ப்பது மட்டுமே தீர்வாக இருக்கமுடியும். நம் மீனவ சமூகத்தை பழங்குடியினத்தில் சேர்ப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கின்றது.

1999 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தேசியப் பழங்குடியினர் ஆணையம் சில சாதிகளை பழங்குடி இனத்தில் சேர்ப்பதற்கான ஐந்து வரையறைகளை நிர்ணயித்தது

1. சமூகத்தில் பின்தங்கிய நிலை
2. பழமையான பண்புகள் இருப்பதற்கான அறிகுறிகள்.
3. தனித்துவமான பண்பாடு
4. பூகோளரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலை
5. பிற சமூகங்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதில் உள்ள கூச்சம் அல்லது தயக்கம்

சமூக மற்றும் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் மீனவ சமூகம் இருக்கின்றது. சமூக அந்தஸ்து என்பது கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பை மையமாக வைத்தே இருக்கும். ஆனால் மீனவர்களின் கல்வி அறிவின் நிலையை பார்த்தோமானால் பட்டியில் இன மற்றும் பழங்குடி இனத்தை காட்டிலும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றனர். அரசு வேலை வாய்ப்பில் 0.01 சதவிகித கூட மீனவர்களுக்கு இல்லை.

மீனவர்களின் பழமையான பண்புகளுக்கான அறிகுறிகள் என்ன என்று பார்த்தீர்களானால் உலகத்தில் முதலில் தோன்றிய தொழில் வேட்டைத் தொழில். காட்டில் நடப்பது மட்டுமே வேட்டைத் தொழில் என முடிவிற்கு வந்துவிட கூடாது. கடலில் நடப்பதும் வேட்டைதான். பெருபான்மையான மீனவர்களின் வாழ்வாதாரம் வேட்டைத் தொழிலை நம்பி தான் இருக்கின்றது.

மீனவர்களுக்கென தனித்துவமான பண்பாடு உண்டு. எந்த சமூகத்திற்குமே இல்லாத ஒரு சமூக உள்கட்டமைப்பு என்ன என்றால் “மீனவப் பஞ்சாயத்து”. மீனவ பஞ்சாயத்தில் பாரம்பரிய மீனவர்கள் மட்டும்தான் உறுப்பினராக முடியும். இந்த பாரம்பரியப் பஞ்சாயத்து மீனவர்களுக்கு ஏற்படும் தொழிற் பிரச்சனைகளையும், தனிநபர் பிரச்சனைகளையும், மற்ற சமூகங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளையும் நிர்வகித்து, கூட்டாக முடிவெடுப்பதை இங்கு உயர்ந்த பண்பாடாக காணமுடியும். இது பழங்குடியினருக்கான முக்கிய ஜனநாயக இயல் பாககாண முடியும்.

மீனவர்கள் பூகோளரீதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதை காண முடியும். அதாவுது பிரதான சாலையிலிருந்து ஒவ்வொரு மீனவ கிராமங்களும் மூன்று கிலோமீட்டரிலிருந்து ஐந்து கிலோமீட்டர்வரை தள்ளித்தான் இருக்கின்றது. மற்ற வெகு மக்களுடன், மீனவ சமூகங்களுடனான தொடர்பு மிக மிகக் குறைவு
மீனவ சமூகம் ஒரு சுயமரியாதையுள்ள சமூகம். மீனவர்கள் மத்தியில் அவர்களின் உழைப்பு ஏற்ற கூலி கிடையாது. தொழிலில் மீனவர்களுக்கு இருப்பது பங்கு மட்டுமே. கடலுக்கு மீன் பிடிக்கப் போய்விட்டு வந்து பங்கு பிரிப்பார்கள். பங்கு பிரித்து அவர்களுக்கான பங்கை (share) எடுத்துக்கொள்வார்கள். இப்படிப் பங்கு பிரிப்பதில் நீயும், நானும் இதனால் சமம் என்ற கருத்துருவாக்கம் வருகிறது. சுயமரியாதை வருகிறது. சுய கௌரவம் வருகிறது. சுயமரியாதையும், சுயகௌரவமும் உடையவன் இன்னொருவரிடம் கையேந்தி நிற்கமாட்டான். இதனால் பிற சமூகங்களுடன் தொடர்பு மிக மிக குறைவாகத்தான் வைத்திருப்பார்கள். சுயமரியாதை உள்ள சமூகத்திற்கு, பிறரால் எப்போதாவது தீங்கு ஏற்படுமாயின், அதன் எதிர்விளைவு மிக மோசமானதாக இருக்கும். அந்த அடிப்படையில் தான்
மண்டல் கமிஷன் அறிக்கையில் இதர பரிந்துரைகள் 13.37 (1)-இல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அரசுக்குப் பரிந்துரைக்கிறது.

ஜனநாயக தத்துவ நீரோட்டத்தில் மீனவ சமூகம் பங்களிக்கின்ற அளவிற்கு, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பங்கேற்காததினால், அரசின் வளர்ச்சி திட்டத்தில் இவர்களால் முழுமையான பங்கை பெறமுடியவில்லை. ஒவ்வொரு மீனவ கிராமத்தையும் நாம் எடுத்து கொண்டோமானால், சுய ஆட்சித் தத்துவத்தின்படி மீனவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தான் ஆளுகின்றது.
ஒவ்வொரு மீனவ கிராமத்திற்கும் பொதுச் சொத்து உள்ளது. மீனவர்கள் தங்கள் மரபுசார் அறிவைப் பயன்படுத்தி தான் இன்றும் மீன் பிடித்து வருகின்றார்கள். மீனவர்களுக்கு மரபுசார் அறிவு என்பது அவர்களுடைய இரத்தத்திலேயே ஊறிப்போய் உள்ளது. வேட்டைக்காரப் பண்பாட்டிற்கிணங்க நாடோடிகளாக இடம்விட்டு இடம்பெயர்ந்து மீன்பிடி வேட்டைக்கு செல்வதை காணமுடிகின்றது. இப்படிப்பட்ட சுயசார்புள்ள மீனவ சமூகத்திற்கு மண்டல் கமிஷனில் பரிந்துரை படி மீனவர்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும் என இருந்தும் இதுவரை ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சிகளும் மீனவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல அரசியல் பிரிதிநித்துவம் கொடுக்க முன்வரவில்லை. ஆதலால் நாமே, நம் சமூகத்தை போன்று சுய சார்புடன் அரசியலில் எழுச்சி பெற்றால் மட்டுமே நம் மீனவ சமூகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க பெறும்.
ஆதலால் தேசிய அளவில் நடந்தேறி வரும் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக, தமிழக மீனவர்களும் தமிழகம் தழுவிய பிரச்சாரத்தில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.


இப்பிரச்சாரத்திற்கு, இந்தியாவின் இரும்பு மங்கை என அழைக்கப்பட்ட பூலாந்தேவியின் மூத்த சகோதரியும், ஏகலைவன் சேனாவின் தேசிய தலைவியுமான திருமதி ருக்குமணி தேவி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்ய இருக்கின்றார்கள்.
தமிழகத்தை சேர்ந்தவரும், திரு.கன்சிராமின் பகுஜன் இயக்கத்தின் மூத்த தலைவரும், புது டெல்லியை தலைமை இடமாக கொண்டு இந்தியா முழுவதும் உள்ள OBC/ SC / ST மக்களை ஒருங்கிணைத்து அரசியல்படுத்தி வரும் திரு.ஜீவன் குமார் மள்ளா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள இருக்கின்றார்.

குமரி மாவட்டத்தில்
மீனவர்ஒருங்கிணைப்புச்சங்கம்.
செயலாளர்.
திரு.ஆன்றோலெனின் தலைமையிலும்.

ஆகையால் மீனவர் சமூகமாகிய நாம் ஒற்றை கோஷமாக மீனவ பழங்குடியினர் பட்டியலில் நம்மை சேர்ப்பதற்கான வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டு நடைமுறை படுத்தி அதிகார அரசியலை ஏற்படுத்திட வாரீர்

அரசியலாய் எழுவோம்..!!! அதிகாரம் பெறுவோம்..!!!

L. பிரவீன் குமார் பரதவர் M.B.A.,B.L,
பொது செயலாளர்

கடல்சார் மக்கள் நல சங்கமம்

தேசிய தலைமை அலுவலகம் : 6659, பிளாக் எண் : 9, தேவ் நகர், புது டெல்லி 110005
தமிழ் நாடு செயலகம் : 54 மண்ணடி தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை 600001, தமிழ் நாடு

9/53c6 ஏசுதாஸ்காலனி
குளச்சல் 620251
குமரிமாவட்டம்
மீனவர்ஒருங்கிணைப்புச்சங்கம்
பதிவு எண்:58/2018
அலுவலகம்

————————————————————–
மீனவர்களின் கோஷம் பாராளுமன்றத்தில் முழங்க…

7 பிப்ரவரி 2020

டெல்லியை நோக்கி அணியமாவீர்..

————————————————————

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*