உடையும் கண்ணாடிகள் (நூல் விமர்சனம்)

உடையும் கண்ணாடிகள் (நூல் விமர்சனம்)

விஜய் சேசுலா
விஜய் சேசுலா

இறையுமந்துறை விஜய் சேசுலாவின் “உடையும் கண்ணாடிகள்” என்னும் கவிதைத் தொகுப்பு எனது கைக்குக் கிடைத்தது. கவிதை ஈடுபாடு காரணமாக, உடனே நூலைப் படித்து முடிக்க வேண்டுமெனும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

படித்து முடித்ததும் வியந்தேன். கடற் படுகையின் தேரிகளிடையே ஒரு தேர் அல்லவா உலா வந்துகொண்டிருக்கிறது என்று புருவம் உயர்த்தினேன். இந்த இளம் கவிஞனின் எழுத்து முனையில் என்னென்னவோ உருவகங்கள் இசையலங்கார அழைப்பு விடுப்பதைக் கண்டு சற்றுநேரமேனும் நான் தன்வயமிழந்தேன்.

பல்வேறு தலைப்புகள்.. அவை ஒவ்வொன்றையும் விஜய் சேசுலா என்னும் கவியுள்ளத்தின் கண்கள் எப்படி அணுகுகின்றன என்ற கள ஆய்வுத் தளத்தின்கண் நான் இறக்கி விடப்பட்டதாக உணர்கிறேன். மூக்கணாங்கயிறு இல்லாத அரபுக் குதிரைகள்போல் விஜய் சேசுலாவின் கற்பனை வளம் மூர்க்கம் தெறிக்க முன்னோக்கிப் பாய்கின்றது..

கவிஞனின் கற்பனை வளத்தையும் கருத்துச் செறிவையும் சொல்லின் கையாளல்தான் நிச்சயம் செய்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற எச்சரிக்கைச் சாட்டையால் கவிஞன் எக்காலத்தும் பதப்படுத்தப்பட்ட வண்ணம்தான் இருக்கிறான். இந்தவொரு உண்மைக்கு இந்நூலின் கவிதைகள் உரம் சேர்க்கின்றன என்பேன். காரணம், சொற்களின் தேவைக்கேற்ப மட்டுமே வரிவடிவங்கள் இங்கே செதுக்கப்பட்டுள்ளன. சொல்லவந்த செய்திகளும் சுகப்பிரசவம் எய்தி நிற்கின்றன.

பொருளடக்கம் இல்லாமலேயே நூலின் தொடக்கம் இருப்பதை நாம் ஒரு நுழைவாயிற் பிழையாகப் பார்க்க நேரிடினும், கவிதைகளின் விறுவிறுப்பான போக்கு அந்தப் பிழைக்கு ஒரு பிராயச்சித்தம் உண்டாக்கிவிடுகிறது. 

கவிதை ஒவ்வொன்றையும் அலசி அறிமுகப்படுத்தும் பணியைத் திருத்தமிழ்த் தேவனார் அழகுற நிறைவேற்றி இருப்பது அருமை. அணிந்துரை என்ற போர்வையில் அளந்து அளந்து கொட்டும் சில அதிமேதாவிகள் போலில்லாமல், சுருக்கமாகவும் சுவைபடவும் தனது திறனாய்வை நகர்த்துவது மிகவும் பக்குவமாகப் படுகிறது. அதிலும் குறிப்பாக, கண்ணதாசன், வாலி, நா. காமராசு போன்ற பிரபலங்களின் மேற்கோள்களை இயைபுபடுத்தும் உத்தி மிகச் சிறப்பு.

கவிதாயினி ஜூடி சுந்தர் தனது வாழ்த்தினைக் கூறி, “கவி தா, இனி!” என்று விஐய் சேசுலாவிடம் கோரிக்கையும் வைப்பதுபோல் இருக்கிறது.

மயானத்திலிருந்து தனது கவிதைப் பல்லக்கைத் தொடங்கிய விஜய் சேசுலா, முத்தமிடுங்கள் என்ற கோரிக்கையோடு பல்லக்கை நிறுத்துகிறார். இடையே அவர் ஓட்டி வருகின்ற மேடுபள்ளங்களில் எல்லாம் நம்மையும் கூட்டிச்சென்று குமுற வைக்கிறார்: கொண்டாடவும் வைக்கிறார்.

தம்பி விஜய் சேசுலா முன்னகர்ந்து செல்ல வேண்டும். மேலும் முனைப்போடு கவி நுணுக்கங்கள் அறிய வேண்டும். நெய்தல் உலகம் ஒரு நிமிர் நன்னடைக் கவிஞனை எதிர்நோக்கிக் காத்துகொண்டிருக்கிறது. பாராட்டுகள்!..

– தொ. சூசை மிக்கேல் 
ஆய்வாளர்,  கவிஞர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*