ஒன்றுபடு ( கவிதை)

சரித்திர புருஷர்கள் ஆண்ட
சாதனை தமிழ் தேசத்தை –
மங்குனி மந்திரிகள் ஆள்வதால்- எம்
மானம் கெட்டுப் போச்சு
ஈன பிழப்பு ஆச்சு.‌.

ஸ்டெர்லைட் ,
அணு உலை ,
ஹைட்ரோ கார்பன் எனும்
அழிவு திட்டங்களுக்கு
அனுமதி அளித்து
பெருமை அடிக்கும்
பெரும் களவாணி கூட்டத்தில் – எம்
பெரு நாடு சிக்கித் தவிக்கிறது..

மதுவுக்கு எதிராக
செயல் புரிந்த
பெரியார் வழி பிள்ளைகள் –
மது ஆலைகள் நடத்துவதும்
மதுவை அரசே விற்பதும்
விந்தையின் உச்சம்..!
மந்தையின் கூச்சம்…!

சமூக நீதி
சமத்துவ போதி மறந்து
குடும்ப அரசியல்
கும்மாளம் போடுவது –
அமுத திராவிடம்
திரிந்த பாலாய் போனது..

ஊழல் பெருநதியில்
ஊறித்திளைக்கும்
நாதாரி மந்திரிகளால்
வேடதாரி தந்திரர்களால்
தமிழ் மக்களுக்கு கடன் வந்தது
ஐந்து இலட்சம் கோடி..!
தமிழக மந்திரிகளுக்கு கிடைத்தது
ஐந்து நட்சத்திர மாடி…!

கல்லணை கட்டியவனின்
மரபணு மந்திரிகள் – தேவைக்கு
அணைகள் கட்ட – அரசு
ஆணைகள் இடாததால்
விளைநிலங்கள் அழிந்து
வீடு மனைகள் ஆனது ‌‌..!
விவசாய விளைச்சல் குறைந்து
விவசாயிகளின் சாவு நீளுது..!

கலவி மயக்க கண்ணுக்கு
கழுதையும் பேரழகாய்
தெரிவது போல் –
வயற்காடுகள் அழித்து – எட்டு வழி
தார் ரோடுகள் போடுவது
பெருமையாக தெரிகிறதோ..!?

கல்வியையும் ,
மருத்துவத்தையும்
மக்களுக்கு அளிப்பது
நல் கோல் அரசின் கோட்பாடு..!

மதுவை விற்பதும்
மக்களை அழிப்பது
கொடுங்கோல் அரசின் தீ காடு…!

எண்ணைக் கழிவு
எண்ணூரில் மிதந்த போதும் ,
அணுக்கழிவை பாதுகாக்க
அழகிய குமரியை ஒதுக்கிய போதும்
கும்பிடு சாமி மந்திரிகளும்
குடும்ப அரசியல் தந்திரிகளும் –
தான் சேர்த்த
ஊழல் பணத்திற்கு
ஊறு வந்து விடும் என
ஊமையாக இருப்பதை என்ன சொல்ல ?

உவர்பற்ற உல்லாச மந்திரிகள்
உயர்நிலை அடைய
உயிர் நீர் நிலைகளை
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு
விற்றதால் – வாங்கியவன்
நீர்நிலைகளையும் அழித்து
நிலத்தடி நீரையும் அழித்ததால் –
இயற்கை எழில் சோலை
இதயம் செத்து ஆனது பாலை…!

பிரித்தாளும் மத்திய அரசுக்கும்  – நம்மை
வெறுத்தாளும் மதியில்லா அரசுக்கும்
தூபம் காட்டும்
சாபக்கேடு அரசால்
சீர்கேடு ஆனது தமிழனின் வீரம்..!

தமிழனே..!
தனிப்பெரும் மறவனே…!
நம் நிலம்
வேட்டையாடப்படுவதை
வேடிக்கை பார்த்துக்கொண்டு இராதே..!

ஒன்றுபடு..!
வென்று முடி..!!

                                                             கவிஞர். விஜய் சேசுலா

விஜய் சேசுலா
விஜய் சேசுலா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*