வாரிக்கொடுத்த வளைகுடா – நூல் விமர்சனம்

இந்நூலாசிரியர் பள்ளம் தொ. சூசைமிக்கேல் கன்னியாகுமரி மாவட்டத்தின் “பல்கலைக்கழகம்” என்றால் மிகையாகாது. ‘ பட்டுமணல் மொட்டுக்கள்’,’ ‘திருவள்ளுவர் நெய்தல் நிலத்தவரே’, தொடங்கி பல அரிய நூற்களைத் தமிழுக்கு தந்தவர் அந்த வரிசையில், ‘வாரிக்கொடுத்த வளைகுடா’ நூல். இதை ஒரு அனுபவ நூல் என்பதா, புதினம் என்பதா, அதையும் தாண்டி வாசிக்கின்ற ஒவ்வொருவரையும் இரயிலில் அழைத்துச்சென்று, வானவூர்தியில் பறக்கவைத்து, வளைகுடாவில் பல பகுதிகளை, பல மொழி பேசும் மக்களை, பல குணமுள்ள மனிதர்களை, பல மகிழ்வான தருணங்களை, பல இன்னல்களை, பல ஏமாற்றங்களை, துயரங்களை , பிரிவுகளை, உறவுகளை….. இன்னும் எத்தனை எத்தனையோ அனுபவங்களை நேரில் சென்று அனுபவித்த உணர்வை ஏற்படுத்துகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..

நூலில்  ஆசிரியர் வளைகுடா தேசத்திற்குப் பயணப்படுகின்றார்..  டெல்லி சென்றடைந்த நாள் அக்டோபர் 31, 1984.  எழுத்தாளர் மட்டுமன்றி இந்தியர் அனைவருமே மிகப்பெரிய ஆளுமையை இழந்த நாள். தனது பயணம் நின்றுவிட, ஊர் திரும்புகிறார். சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் வளைகுடா பயணம்.

பயணத்தின் போது வானூர்தியில் ‘இந்த தமிழர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது ஹிந்தியும் தெரியாது’ என மலையாள பணிப்பெண்களால் கூறப்பட்டபோது, தமிழன் அனைத்தும் தெரிந்தாலும் அமைதியாக இருப்பவன் எனத் தன் பன்மொழிப் புலமையால் அவர்கள் மொழியிலேயே பதில் தந்தது வியப்பு.. தான் பணிபுரிந்த இடத்தில், பல மொழி பேசுபவர்கள் மத்தியில்  ஒவ்வொரு மொழியிலும் தமிழ் மொழிக்கு உள்ள உறவை எடுத்தியம்புகிறது இந்நூல். 

தாய்லாந்து மொழிக்கும், தமிழ்மொழிக்குமுள்ள உறவைக் கூறும்போது, ’தி’ என்ற தாய்லாந்து சொல்லிற்கு ‘ நல்லது’ என்று பொருள். ‘தி’ என்பதற்கு பழந்தமிழில் ‘நல்லது’ என்றும், தாய்லாந்து மொழியில் ‘கங்குக்’ என்றால் இரவு என்றும் ‘கங்குல்’ என்ற பழந்தமிழ்ச் சொல் இரவைக்  குறிப்பதாக விளக்கியிருப்பதும், அரபு மொழியிலுள்ள தமிழ்த் தடயங்களைக் கூறுமிடத்து, இல்லை என்பதை ‘ல’ எனவும், வீடு என்பதை ‘பேத்’ என்வும் தமிழ் திரிந்து அரபி மொழியாகி யிருப்பதைக் கூறியிருப்பதும் எழுத்தாளரின் மொழிப் புலமையை எடுத்தியம்புகின்றது.

சவுதியில் ஹோஃபூஃப் பகுதி பாலைவனச் சோலை. அங்கே அரபியர்கள் தங்களை  வரவேற்று பேரீச்சைப்பழமும், சுலைமான் டீயும் வழக்கின பாங்கு அவர்களது விருந்தோம்பலைப் பறைசாற்றுவதாக இந்நூல் எடுத்துக்கூறுகிறது.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கும், அவர்களைப் பிரிந்த குடும்பத்தினருக்கும் கடிதம் ஒன்றே ஆறுதல். ஊரிலிருந்து  வரும் கடிதம், குழந்தைகள், உறவுகள், நாட்டுநடப்புகள், அத்தனையும் சுமந்து வரும். அதைப் படிப்பதே தனி அலாதி. கடிதத்தை ஆயிரமாயிரம் முறை படிப்பதே தனி இன்பம். ஆனால் அதே கடிதம் துன்பத்தைச் சுமந்து வந்தால் … ஆம்! ஆசிரியர் தனக்கு வந்த கடிதம், தான் வரும்போது பச்சிளம் மொட்டாக விட்டுவந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று சீரியசாக மருத்துவமனையில் உள்ளதாக வந்த கடிதம், அதனைத் தொடர்ந்து அந்தக் குழந்தையின் இறப்பு, தொடர்ந்து அடுத்த குழந்தையின் இறப்பு இப்படியான கடிதங்களை எழுதியவர் மை கொண்டு எழுத வாய்ப்பில்லை. இதயத்தைப் பிழிந்து இரத்தமும், கண்ணீரும்  கலந்த கலவையைக் கொண்டு எழுதியனுப்பும் அந்தக் கடிதம் . அதை எழுதுவோரையும் , படிப்போரையும் மட்டுமன்றி வாசிப்போரின் உள்ளத்தையும் நொறுங்கச் செய்யும் .

ஈரான்,ஈராக் போர் நிகழ்ந்தபோது இந்தியாவில் தங்கள் உறவுகளைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தது, பதட்டத்திலும், பயத்திலும் அடைந்த கஷ்டம் அனைத்தும் நேரில் அனுபவித்ததைப் போன்ற அனுபவம் இந்நூலில் நமக்குக் கிடைக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் மலையாளம் பேசுவது வியப்பொன்றுமில்லை சுமார் 50,60  வருடங்களுக்கு முன் கேரளத்தின் ஒரு பகுதி யாக இருந்த்து என்ற மலையாளியின் விளக்கத்திற்கு , பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கேரளம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக , சேரநாடாக இருந்தது  என்ற எழுத்தாளரின்  விளக்கம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றியது தமிழ்மொழி என்பதை இந்நூல் ஆணித்தரமாக எடுத்தியம்புகிறது.

புயல் மழை, பனிமழை என மழைகளைப் பார்த்திருக்கிறோம். வளைகுடா பகுதியில் பெய்யும் புயல்காற்று மழையை நூலின் வாயிலாக அறியவரும்போது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

இடையில் இந்தியா வந்து குடும்பத்துடன் கழித்த இனியபொழுது, பிரிய மனமில்லாமலா மனத்துடன் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க முடியாமல் மீண்டும் வளைகுடா செல்வது வெளி நாட்டு வாழ் இந்தியர் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வலியை இந்நூல் எடுத்துக் கூறுகிறது.

பன்மொழியறிவு மட்டுமன்றி இசையிலும் தேர்ந்த அறிவைப் பெற்ற எழுத்தாளர் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என தனக்குத் தெரிந்த கலையை வளைகுடாவில் பிறருக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் பரந்த மனப்பான்மையை இந்நூல் பிரதிபலிக்கிறது.

வெளிநாட்டு வாழ்க்கையில், தான் நினைத்த வேலை கிடைக்காதது , எப்படி வேலை செய்தாலும் குறைந்த ஊதியம் , ஆண்டுகள் பல ஆனாலும் ஊதிய உயர்வின்றி, வேலையை  விடவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவிக்கும் தவிப்பு … தான் ஊதிய உயர்வு கேட்டபோது “இறைவன் சித்தம்வைத்தால்” என்ற ஒரு சொல் மந்திரத்தை அரபிகள் பயன்படுத்தும்  நூதன முறையை இந்நூல் எடுத்தியம்புகின்றது.

தான் வேலையிழந்து இந்தியா திரும்பிய போதும், அதை வெளிக்காட்டாமல் ஊரில் வீடு கட்டி குடியேறியபின் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி நாகர்கோவிலில் இடம்பெயர்ந்தபின் ஃப்ரி விசாவில் வளைகுடா சென்று அகதிபோல் நின்ற தனக்கு உதவியவர்களை நன்றியோடு நோக்குகின்றது இந்நூல்.

தமாம் முத்தமிழ் மன்றத்தின் உறுப்பினராகி இசையால் அனைவரையும் கவர்ந்து பொங்கல் கொண்டாடி மகிழ்ந்ததையும் தனது ‘இக்காமா’ மறைத்து வைக்கப்பட்டதால் மனதில் ஏற்பட்ட உளச்சல் அது திரும்பக் கிடைத்ததால் உண்டான மகிழ்ச்சி அத்தனையும் நூலின் சத்துமிகு முத்துக்கள்.

தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக சந்தித்த அறிஞர் வலம்புரி ஜான், கவிஞர்கள் வைரமுத்து, மு. மேத்தா இவர்களை சந்தித்த தருணங்கள். கவிஞர் வைரமுத்துவிடம்,’ நான் உங்களுக்கு ஒரு வெண்பா எழுதித் தருகிறேன் பதிலுக்கு நீங்களும் ஒரு வெண்பா எழுதிக் கையொப்பமிட்டுத் தர வேண்டுமெனக் கேட்டு 
கவிஞரை மெய்சிலிர்க்க வைத்தது இந்நூல் வாசிப்போரை அதிர வைக்கிறது.

தனது ‘பட்டுமணல் மொட்டுக்கள் ‘ என்ற கவிதை நூலுக்குக் கிடைத்த பாராட்டுக்கள்,  மறைந்த இந்திய ஜனாதிபதி மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து கிடைக்கப்பெற்ற  நற்சான்று இவை படிப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளச் செய்கின்றது.

இந்தியாவை உலுக்கிய சுனாமி, தொடர்பு துண்டிக்கப்பட்ட உறவுகள், கொத்துக்கொத்தாக பூமியின் மடியில் புதைத்த சொந்தங்கள், வேதனையின் கொடுமுடியில் உறவினர் என அனைத்துத் தரப்பினரும்  பரிதவித்த உணர்ச்சி எழுத்துக்கள் படிப்போரை ஒருமுறை கூட சுனாமியின் சுவடுக்கு இட்டுச் செல்கிறது.

எத்தனை உறவுகள், எத்தனை நண்பர்கள் இருந்தாலும், கொண்டவளும் பிள்ளைகளும் நம்மைக் கவனிப்பது போன்றாகுமா நோயின் விளிம்பில்.  ஆம்! நூலாசிரியர் நோய்வாய்ப் படுகிறார் நண்பர்கள் சூழ்ந்தபோதும் கண்ணின் கருவிழி தன் மனைவியைத் தேடுகின்ற பாங்கும் நோயினூடே இந்தியா பயணமும், மனைவி கண்ணீரோடு  பணிவிடை செய்ததும் குடும்பத்தின் பொருளை விளக்குவதாகவே இந்நூல் விளக்குகிறது.  தான் சந்தித்த நண்பர்கள், உறவுகள் அனைத்தும் தாண்டி ஊரில் வரத் துடிப்பதை வெளிநாடுவாழ் இந்தியரின் இதயத் துடிப்பாக  இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.

தனது மகனை வளைகுடா நாட்டிற்கு வரவழைத்துவிட்டு, தனக்கு ஏற்பட்ட நோயின் காரணத்தால் பணியைத் தொடர முடியா நிலையில், இந்தியா வரவிரும்பும்  எழுத்தாசிரியருக்கு, தான் பணிபுரிந்த அலுவலகத்தில் கொடுத்த பிரியாவிடையுடன், தன்னை வாழவைத்த வளைகுடாவிற்கு ‘சலாம்’ சொல்லும் பாங்கு  ஆசிரியரின் நன்றிமறவா நெஞ்சை எடுத்துக்காட்டுவதுடன் நம்மை எழுத்தாளருக்கு ஒரு  பெரிய ‘ சல்யூட்’ அடிக்கவும் செய்கிறது.

ஆக, வாரிக்கொடுத்த வளைகுடா நூல் வளமையை, வறுமையை, நண்பரை, பகைவரை, நோயை, நலனை, இசையை, இன்பத்தை, துன்பத்தை, ஏமாற்றத்தை வாரிக் கொடுத்தாலும் நிறைவானவற்றை, நல்லவற்றை ஆசிரியர் வாரி எடுத்திருப்பது நூலின் சிறப்பு.

படிப்பவரைப் பரவசப்படுத்தி, தனது அனுபவத்தை நமது அனுபவமாக்கிவிட்ட  இந்நூல் அனைவரின் கரங்களில் தவழ வேண்டிய ஒரு பொக்கிஷம்.

ஆசிரியருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

ஜாக்குலின் மேரி

   ஜெ.ஜாக்குலின் மேரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*