குமரி மீனவர்கள் கடலோர காவல் படையால் மீட்கப்பட்டனர்

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சார்ந்த கென்னடி என்பவருக்கு சொந்தமான எல்சடாய் IND-TN 15-MM 4636 என்ற சிறு விசைப்படகில் சின்னத்துரை கிராமத்தைச் சார்ந்த ஜோசப் மகன் தோமஸ்(60) ரோனிமுஸ் மகன் கென்னடி மற்றும் சின்னத்துறை கிராமத்தை சார்ந்த அம்ப்ரோஸ்(60), சசி(38), பீட்டர்(60), தனிஸ்டன் ஆகிய 6 மீனவர்களும் இம்மாதம் 13ஆம் தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தார்கள். இம்மாதம் 16ஆம் தேதி தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 70 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவருடைய விசைப்படகு திடீரென்று பழுதடைந்தது. இச்செய்தியை மீனவர்கள் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல்களுக்கு தங்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். சரக்கு கப்பல்கள் மீனவர்களது இயந்திரம் பழுதடைந்து நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தச் செய்தியை தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு தெரிவித்தார்கள். செய்தி கிடைத்ததும் இந்திய கடலோர காவல்படை தூத்துக்குடி கிளையின் டிஐஜி அரவிந்த் சர்மா அவர்களுடைய வழிகாட்டுதலில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஆதர்ஷ் என்ற கப்பல் 18 ஆம் தேதி இன்று ஆழ் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆறு மீனவர்களையும் அவரது சிறு படகையும் மீட்டு  தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்துக்கு சேர்த்தார்கள். ஆறு மீனவர்களையும் அவரது விசைப்படகில் பாதுகாப்பாக மீட்டு கரை சேர்த்த இந்திய கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி கிளையில் டிஐஜி அரவிந்த் சர்மா அவர்களுக்கும் இப் பணியை திறம்படச் செய்த இந்திய கடலோர காவல்படை ஊழியர்களுக்கும் தெற்காசிய மீனவர் தோழமை மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றது.

பணி. சர்ச்சில், IVD
பொதுச்செயலாளர்
தெற்காசிய மீனவர் தோழமை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*