கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்

கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 5 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களுடைய குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமயில் அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ், ஆன்றோ மற்றும் கத்தார் நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேரின் குடும்பத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டம் பெரியகாட்டைச் சேர்ந்த ஜான்போஸ்கோ (வயது 58), கோவளத்தைச் சேர்ந்த அனி மைக்கேல் அலோசியஸ் (30), மணக்குடியைச் சேர்ந்த கணிஸ்டன் (36), கோடிமுனையைச் சேர்ந்த கன்சாலின் (28), கன்னியாகுமரியைச் சேர்ந்த சகாயஜோஸ், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியைச் சேர்ந்த ஆண்டனி ஆகிய 6 பேர் கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி பக்ரைன் நாட்டில் இருந்து மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு விசைப்படகில் சென்றனர்.

அவர்கள் கத்தார் கடல் எல்லையை தாண்டியதாக கத்தார் கடற்படையால் மீனவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் உடனடியாக விடுவித்து சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்,இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*