சேலாளி – நூல் விமர்சனம்

தூத்தூர் வழக்கறிஞர் திருமதி ஜாக்குலின் மேரி, தனது தம்பி திரு. ஜேசுதாஸ் ஜெறோம் எழுதிய “சேலாளி” என்ற குறும் புதினத்தை எனக்கு வழங்கினார்.

தலைப்பைக் கண்டதும் இது முழுக்க முழுக்க ஒரு கடல்வாழியின் மீன்வேட்டத்தை மட்டும் மையமாக வைத்துப் பின்னிய புனைவு இலக்கியம் என்றே எவரும் கருதுவர். ஆனால், இது சற்று வித்தியாசமான ஒரு நெய்தல் நுணுக்கவாதியை நம் கண்முன்னே நிறுத்துகின்ற கதையாக அமைந்திருப்பது சிலிர்க்க வைக்கிறது..

பொத்தாம் பொதுவான நெய்தல் வட்டார வழக்கு இங்கே முழு வீச்சில் இல்லை.. எனவே எத்தரப்பு வாசகனுக்கும் சலிப்பு ஏற்படாத வகையில் சம்பவங்களின் நகர்வு அமைந்திருக்கிறது.. ஆனால், நெய்தல் வழக்கு அந்நியம் கண்டுவிடாதபடி, தொடக்க அத்தியாயங்களில் நெய்தலுக்கே சொந்தமான நெடிகள் நகைச்சுவை ததும்பும்வண்ணம் பரிமாறப்பட்டுள்ளன.. ‘உரிஞ்சிட்டாங் கடவு’ ஓர் எடுத்துக்காட்டு. கூடவே “இதுபோல இருபத்து நாலண்ணம் வீட்டிலுண்டு” என்ற உரையாடலால் விளையும் ‘உள்குத்து’ வேலையையும் சொல்லலாம்.. சிறுவர்கள் பக்கி பிடிக்கப் பாடும் ‘தாளம்மா தாளு’வின் கிராமிய வாசனையும் கமகமக்கிறது..

இப்படி சுவாரசியமான பதிவுகளோடு தொடங்கும் கதை, திடீரென்று பரபரப்பு மேலிடப் பாய்ந்து செல்கிறது.. ஒக்கிப் புயலின் கோரத் தாண்டவம் தூத்தார் பகுதிக் கடல்வாழிகளின் கண்களையும் திறக்கிறது.. அதன் விளைவாக, மீனவனின் திறமைகளைக் கல்வி மயமாக்கி அதனால் சாதிக்க இயலுகின்றவற்றைப் பட்டியல் போடுகிறது இந்த நாவல்.. ஜோசப் என்ற தனியொரு மீனவர் வகுத்துத் தருகின்ற வரைமுறைகள்தாம் அவரை ஓர் நவீன நெய்தல் “சேலாளி” ஆக்குகின்றன.. கதையின் இந்த உச்சத்தில் வந்து சேரும் போது, வாசகனை ஒருவித சிலிர்ப்பும் செருக்கும் சிறைப்பிடிக்கின்றன..

இடையே வரும் ‘நேதாஜி லைப்ரரி’, விளையாட்டுப் போட்டிகள், துபாய்க் கசப்புகள், சென்னை பற்றிய சிலாகிப்புகள், விசாகப்பட்டின விநோதங்கள்.. எல்லாமே இதமான இனிப்புகள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை..

அண்மைக்கால எனது வாசிப்பு அனுபவத்தில், இந்த நாவலைப் போல எடுத்ததும் விரைந்து படித்து முடித்த இன்னொன்று என்னால் சொல்ல இயலவில்லை.

அருமைத் தம்பி ஜேசுதாஸ் ஜெறோம் இன்னும் முகடுகளை எட்ட வேண்டும்.. முயன்றால் எட்டவும் முடியும்..

வாழ்த்துகள்..

– எழுத்தாளர் .தொ. சூசைமிக்கேல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*