வேம்பு – சிறு கதை

” ஏ…வேம்பு, ஏய்… வீட்ல ஆள் இல்லையா?” என்று சத்தம் போட்டுக்கொண்டே வீட்டின் வாசலை கடந்து, திண்ணையில் அடுக்கி வைத்திருந்த கருவாட்டின் மணத்தை உள்இழுத்தவாறே, நடுவீடு வரை வந்திருந்தாள் ரீத்தம்மாள். மணி ஏழு ஆகியும் வீட்டின் உள்ளே பெரிதாக வெளிச்சமே இல்லை. இரவு முழுவதும் பெய்த மழையில் வீட்டின் ஓட்டிலிருந்து கசிந்த நீர் துளிகள் தரையில் இன்னும் காயாமலே இருந்திருக்கும், ஈரமான துணி ஒன்று விரிந்து பரந்து கிடந்தது. அதை கவனித்து மிதிக்கா வண்ணம் ஒதுங்கி நின்றாள் ரீத்தம்மாள்.

ரீத்தம்மாளின் சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து எட்டி பார்த்தபடியே,
“அம்மைக்கு ஒடம்பு சொகமில்லை…ரூமில தூங்குது. என்ன விசயம்?” என்று பதிலளித்தாள் ரோசி.

“அம்மைக்கு என்ன செய்யுது? நேத்து எனக்க கூட மீன் கொண்டு வந்தாளே?” என விசாரித்தபடியே அறையின் உள்ளே எட்டி, பாயில் கிடந்த கிளாரம்மாவை பார்த்த படி வெளியே வந்தாள் ரீத்தம்மாள்.

“நேத்தைக்கு சாயங்காலம் சந்தையிலிருந்து வரும்போது மழையில நனைச்சிருக்கு, அதான் சளியும் காய்ச்சலும். ராத்திரி ஒருநேரம் கண்ணு மூடேல பாத்துக்கோங்க. இப்பம் தான் கொஞ்சம் தூங்குது…” என அடுப்பில் இருக்கும் பால் பொங்கி வழிகிறதா என்று பார்த்தபடியே சோகமாக பதிலளித்தாள் ரோசி.

“சரி எழும்பினா வல்லமும் தின்ன குடு மோள …நான் பெறவு வாரேன்.” என்று சொல்லியவாறே நகர்ந்தாள் ரீத்தம்மாள். அதை காதில் வாங்கிக்கொண்டே அவசரமாக அடுப்பை அணைத்து விட்டு, “ஏ மாமி வந்த விசயத்தை சொல்லுங்க…ஒண்ணும் சொல்லாம போறோம்.” என்று ரோசி, ரீத்தம்மாளின் பின்னாலேயே வாசல் வரை வந்து நின்றாள்.

“ஒண்ணும் இல்ல மோள. மழை பெஞ்சதால மரங்க ஒண்ணுவோளும் கடலுக்கு போவேல. இன்னைக்கு மீன் சந்தை வெறுமனே கிடக்கும். அதான் அம்மைககிட்ட கிட்ட கருவாடு எப்பமும் இருக்குமே…இன்னைக்கு வித்தா நல்ல விலையும் கிடைச்சும். அத சொல்லவாக்கும் வந்தேன்.” என பதிலளித்து கொண்டே திரும்பி நடந்தாள் ரீத்தம்மாள்.

அறையில் தூங்கியவாறே இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கிளாரம்மாவிற்கு பிறந்தது மூன்றுமே பெண் குழந்தைகள் தான். முதல் இரு பெண் குழந்தைகள் பிறந்தபோதும் மிகவும் மகிழ்ச்சியோடே காலத்தை கடத்த தொடங்கி இருந்தாள். மூன்றாவதும் பெண் குழந்தையாக ரோசி பிறந்ததுமே கிளாரம்மாவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி எங்கோ தொலைந்து போயிற்று. இந்த சமூகத்தில் ஒற்றை பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்கவே முடியாமல் பலரும் திணறும் சூழலில் மூன்றும் பெண்ணாக பிறந்தால் எப்படி அவளால் மட்டும் இயல்பாக இருந்திருக்க முடியும். அப்போதெல்லாம் கிளாரம்மாவின் முகம் சிரிப்பை இழந்து எப்போதும் சோகமாகவே இருந்திருக்கும்.

“எப்ப பாத்தாலும் வேப்பிலை தின்னது போலலா முகத்த வச்சிருக்கா” என எதிர் வீட்டு கிழவி கொளச்சக்காரி அடிக்கடி சொல்லி சொல்லி, கடைசியாக கிடைத்த பட்டப்பெயர் தான் “வேம்பு”. பின்பு அந்த பெயரே கிளரம்மாவிற்கு நிலைத்து விட்டது. இப்போதெல்லாம் “கிளாரம்மா” என்ற தன் பெயர் யாருக்கும் நினைவிருப்பதாகவே தெரியவில்லை.

ஆரம்ப காலங்களில் தன் கணவனின் வருமானமே போதும், பிள்ளைகளை கரை சேர்த்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல தன் கணவனின் ஒற்றை வருமானத்தில் தன் பிள்ளைகளை கரை சேர்க்க முடியாது என்பது தன் முதல் மகள் ராணியை திருமணம் செய்து கொடுக்கும் போதே வேம்புவிற்கு தெரிந்து விட்டது. அப்போதிலிருந்தே மீன் சட்டி அவளது தலையில் ஏறி இருந்தது. உள்ளூரில் திருமணம் செய்து கொடுக்க வரதட்சணை அதிகம், “இங்க ஒருத்திய கெட்டு குடுக்குத பணத்த வச்சு மூணு பிள்ளைகளையும் வெளியூர்ல கெட்டு குடுக்கலாம் பாத்துக்க…” என தன் கணவன் “இருதயம்” அடிக்கடி சொல்வதுண்டு. அது போலவே வேறு வழி இல்லாமல் மூத்தவளுக்கு சேலத்திலும், இளையவளுக்கு மதுரையிலும் மணம் முடித்து கொடுத்திருந்தாள் வேம்பு.

மூத்தவர்கள் இருவரும் வருடத்திற்கு ஒரு முறையேனும் குடும்பத்துடன் இங்கு வந்து விடுவார்கள்.பெரும்பாலும் கிறித்துமஸுக்கு வீடே கொண்டாட்டமாக இருக்கும். வேம்புவும் செலவை பற்றி கவலைப்படாமல் வந்த பிள்ளைகளை மகிழ்வித்தே அனுப்பிவைப்பாள். மற்ற நாட்களெல்லாம் வீடே வெறிச்சோடி கிடக்கும். இன்னும் இருப்பது ரோசி மட்டும் தான். அவளுக்கும் வெளி ஊரில் மணம் முடித்து கொடுத்தால்…பின் தானும் தன் கணவனும் முதுமையில் கவனிப்பார் இல்லாமல் தனியாகி விடுவோம் என நினைத்து, ரோசிக்கு ஊரிலேயே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என ஏற்கனவே மனதில் தீர்மானித்திருந்தாள் வேம்பு.

ஆறு மாதங்களுக்கு முன்னே தன் அண்ணனிடமிருந்து அவரது மூத்த மகன் ஜெகனிற்கு ரோசியை பெண் கேட்டு வருவதாக தகவல் வந்ததுமே வேம்புவிற்கு தலை கால் புரியவில்லை. வெளியே வேறு சம்மந்தம் பார்த்தால் எப்படியும் குறைந்தது ஐம்பது பவன் நகையும் ரெண்டு லட்சம் பணமும் கொடுத்தாக வேண்டும். தன் அண்ணனிற்கு தன் நிலைமை நன்கு தெரியும் எனவே அதிகமாக எதுவும் கேட்காமல் “ஒன்னால முடிச்சத பண்ணு, இந்த வருச கிறிஸ்துமஸில கல்யாணம் நடத்துவோம்” என சொல்லி இருந்தார். என்ன இருந்தாலும் தன் பங்கிற்கு ஒரு முப்பது பவன் நகையாவது செய்யவேண்டும் என்பதே வேம்புவின் ஆசையாக இருந்தது. மகள்கள் ராணியும், செல்வியும் ஆளுக்கு ஐந்து பவன் போடுவதாக சொல்லி இருகிறார்கள். இப்போது கையில் ஒரு பதினைந்து பவன் நகை தேறும். எப்படியும் திருமண செலவிற்கும் சேர்த்து ஒரு மூன்று லட்சமாவது வேண்டும். நாட்களும் அதிகம் இல்லை வெறும் நான்கு மாதமே இருக்கிறது திருமணத்திற்கு, பணத்திற்கு என்ன செய்ய போகிறோம் என்பதே வேம்புவின் யோசனையாக இருந்தது.

தன் கணவனின் உடல் நிலையும் முன்பு போல ஒத்துழைக்காமல் இப்போதெல்லாம் கரைமடி தொழிலிற்கு மட்டும் தான் செல்கிறார். எவ்வளவுதான் உழைத்தாலும் கரைமடியில் வருமானம் பெரிதாக வருவதில்லை, கிடைக்கும் வருமானம் வீட்டு செலவிற்கே போதவில்லை. எனவே வெயிலும் மழையும் பார்க்காமல் மீன் சுமந்து வருகிறாள் வேம்பு. நேற்று மீன் சந்தையிலிருந்து திரும்பும் போது பெய்த பயங்கர மழையில் நனைந்திருந்ததால், நல்ல சளியும் காய்ச்சலும் இருந்தது. விடியற்காலை வரை உறக்கமே இல்லாமல் இருந்து இப்போதுதான் சிறிது கண்ணயர்ந்திருந்தாள் வேம்பு.

ரீத்தம்மாளின் பேச்சு சத்தம் கேட்டு எழும்ப முயற்சித்தும் முடியாமல் படுத்து கிடந்தவளுக்கு, அவள் கிளம்பும் போது சொல்லி சென்ற வார்த்தைகளை கேட்ட உடனே ஏதோ தோன்றி தன் மொத்த பலத்தையும் ஒருமித்து எழுந்து, அமர்ந்த வாறே சிறிது நேரம் இருந்தாள். பின்பு எதோ யோசித்து தீர்மானித்தவாறே ” மோள ரோசி …மீன் சட்டியை எடுத்து வை” என சொல்லி கொண்டே எழுந்து முகத்தை கழுவ முற்றம் நோக்கி மெதுவாக சென்றாள். இப்போதே கிளம்பி மீன் சந்தைக்கு சென்றால் எல்லா கருவாட்டையும் நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று நினைத்து சந்தைக்கு கிளம்பும் மன நிலையில் இருந்தாள் வேம்பு.

தன் தாயின் குரல் கேட்டதுமே ரோசி வேகமாக சமையலறை சென்று டம்ளரில் சாயாவை ஆற்றியவாறே “இன்னைக்கு ஒண்ணும் போவாண்டாம். சாயாவ குடுச்சிட்டு தூங்குங்க” என்று சொல்லி டம்ளரை அருகில் வைத்து விட்டு மீண்டும் சமயலறைக்கே சென்றாள். சூடு கஞ்சி ஏதாவது தயாரித்து குடித்த பின் பக்கத்தில் இருக்கும் மடத்து ஆஸ்பத்திரிக்கு போகவேண்டும் என மனதில் நினைத்தவாறே ரோசி வேலையே தொடர்ந்தாள்.

“எனக்கு ஒடம்புக்கு ஒண்ணும் இல்ல மோள. நீ மீன் சட்டியை எடுத்து வா” என சொல்லிக்கொண்டே சாயாவை கையில் எடுத்து அவசரமாக குடித்தாள் வேம்பு. வேக வேகமாக குடித்து முடித்து பின் திண்ணையில் அடுக்கி இருந்த கருவாட்டை ஒவொன்றாக மீன் சட்டியில் அடுக்க தொடங்கினாள். மகள் ரோசியின் வசை சொற்கள் எதுவும் காதில் விழுந்தது போல தெரியவில்லை. கவனம் சிதறாமல் அடுக்கி முடித்த சிறிது நேரத்திலெல்லாம் கருவாட்டு சட்டியை சுமந்தபடி வெளியே வந்தாள். நின்றிருந்த மழையில் தேங்கிய முற்றத்து நீரில் காலை கதிரவனின் கதிர்கள் பட்டு வேம்புவின் கண்கள் கூசியது. வயிறு சிறிது பசித்தாலும், குடித்த சாயாவே போதும் என நினைத்து சந்தையை நோக்கி நடக்க தொடங்கினாள் வேம்பு.

மதியம் ஒரு மணிக்கெல்லாம் வேம்புவின் இருமல் சத்தம் கேட்டு எட்டி பார்த்து, வெளியே வந்தாள் ரோசி. மீன் சட்டி முழுவதும் காலியாகி இருந்தது. வெயிலில் வந்த களைப்பில் திணையிலேயே அமர்ந்த வாறே சரிந்து கிடந்தாள் வேம்பு. உடம்பின் மொத்த களைப்பும் வேம்புவின் முகத்திலேயே தெளிவாக தெரிந்தது. தன் தாயின் நெற்றியில் கை வைத்து காய்ச்சல் இருப்பதை உறுதி படுத்திக்கொண்டு, கஞ்சியை எடுத்து அருகில் வைத்து குடிக்க வைத்தாள் ரோசி. “சொன்னா கேக்கமாட்டோமா… எவ்ளோ சொன்னேன். இப்பம் காய்ச்சல் இப்படி அடுச்சுது”. என கடிந்து கொண்டே தலையில் கைவைத்து தாயின் அருகே அமர்ந்து கொண்டாள் ரோசி.

“என்ன பண்ண மோள…கல்யாணத்துக்கு இன்னும் மூணு மாசம் தானே இருக்கு. ஏற்கனவே வாங்கின கடனை குடுக்காம யாருகிட்ட போய் பணம் கடத்துக்கு கேக்க…இப்படி எதாவது கிடைச்ச தான் உண்டு.” என சொல்லி பெரு மூச்சு விட்டு கொண்டே கஞ்சியை குடித்து முடித்தாள் வேம்பு.

“சரி கொஞ்ச நேரம் தூங்குங்க…சாயங்காலம் மடத்து ஆஸ்பத்திரிக்கு போகணும்.” என சொல்லிக்கொண்டே ரோசியும் சமைலயறைக்கு சென்று சாப்பிட தயாரானாள்.

மாலை நான்கு மணிக்கெல்லாம் தாயை அழைத்து ஆஸ்பத்திரிக்கு சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாள் ரோசி, வீட்டின் முற்றத்தில் நுழையும் போதே உள்ளே விட்டுச்சென்ற கைபேசி ஒலிப்பது கேட்டுக்கொண்டே இருந்தது. பெரும்பாலும் அக்காமார் யாராவது தான் இருக்கும், வேறு யாரும் இந்நேரம் பேச வாய்ப்பில்லை என்று நினைத்து ஓடிச்சென்று கைபேசியை பார்த்தாள் ரோசி. எதோ புதிய எண்ணிலிருந்து வந்த அழைப்பு அது, ” ஹலோ… யாரு” என யோசித்தவாறே கேட்டாள் ரோசி.

“ரோசி …நான் ஜெகன் பேசுதேன். நல்லா இருக்கியா?” என மறு முனையில் பதில் வந்ததுமே ரோசிக்கு உடலெல்லாம் சற்று வியர்த்து விட்டது.

இந்த குரலை கேட்டு சில வருடங்கள் ஆகியிருந்தது ரோசியிற்கு. தன் சிறு வயது முதலே “ஜெகனுக்கு ரோசிதான்” என உறவினர்கள் சொல்லி சொல்லி கிண்டலடிப்பார்கள். அப்போதெல்லாம் ரோசிக்கு ஜெகனை பிடிக்காது. பின்னர் தான் பத்தாவது படிக்கும் போது ஒரு முறை வாழ்த்து அட்டையில் காதல் கடிதம் எழுதி அவனது தங்கை மேரியிடம் கொடுத்தனுப்பி இருந்தான் ஜெகன். ரோசி எதுவும் பதில் சொல்லாமல் கடிதத்தை கிழித்து விட்டாள். மீண்டும் ஒரு முறை நேரில் பார்த்து காதலை சொன்னான் ஜெகன். அப்போதும் பெரிதாக எதுவும் சொல்லாமல் வந்து விட்டாள் ரோசி. நாட்கள் போகப்போக மெல்ல மெல்ல ரோசியிற்கும் ஜெகனை பிடித்து போனது, ஆனால் வெளியே காட்டி கொண்டது கிடையாது. பின்பு, ஜெகன் தவறாமல் ஞாயிறு காலை இரண்டாம் பூசைக்கு வருவான் என்பதை தெரிந்து கொண்டே ரோசியும் இரண்டாம் பூசைக்கே செல்வாள். ஜெகன் தன்னை பார்க்கும் வண்ணம் இருக்கும் இடங்களிலேயே நின்றாலும் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல நடந்து கொள்வாள். ஆனால் ஜெகனின் தங்கை மேரியிடம் மட்டும் அடிக்கடி ஜெகனை பற்றி விசாரிப்பாள். அடிக்கடி பேச நினைப்பதுண்டு ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் அவளை தடுத்து வந்தது.

“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கோம்?” இம்முறை ரோசியின் வார்த்தைகளில் மாற்றம் வந்திருந்தது. தன்னை விட நான்கு வயதே மூத்தவன் என்றாலும் இதுவரை மரியாதையாக அழைத்ததில்லை.

“நான் நல்லா இருக்கேன். அத்தை இருக்கா? போன குடு” என அவசர படுத்தினான் ஜெகன்.

” இருக்கு… குடுக்குதேன்.” என சொல்லும் போதே அவளின் குரலில் சற்று ஏமாற்றம் தெரிந்தது.

“அம்மா ஜெகன் பேசுதாங்க…இன்னா” என சொல்லி தன் தாயிடம் கை பேசியை கொடுத்து கொண்டே அருகில் நின்றிருந்தாள் ரோசி. எதுவும் முக்கியமான விசயம் இருக்கும் என அவளது உள்ளுணர்வு சொல்லியது.

” என்னா மோனே நல்லா இருக்கியா?” என வேம்பு பேச்சை தொடங்கினாள்.
“நல்லா இருக்கேன் அத்தை… ஒரு சாதனம் மேரிக்க கையில குடுத்து அனுப்புதேன், வாங்குங்க, வேற யார்கிட்டயும் சொல்லாண்டாம். பிறகு பேசுதேன் வைங்க…” என சொல்லி அவசரமாக கைபேசியை துண்டித்தான் ஜெகன்.

கேரளாவிலிருந்து கடல் தொழில் முடித்து அன்று தான் வந்திருந்தான் ஜெகன். எப்படியும் ஒரு வாரம் கழித்து தான் திரும்புவதாக திட்டம். இடையில் ஞாயிற்று கிழமை பூசையில் ரோசியை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியும், இருந்தாலும் முக்கியமான விசயமானதால் கைபேசியில் பேச வாய்ப்பிருந்தும் பேசாமலே நிறுத்திக்கொண்டான். தனக்கு விவரம் தெரிந்ததிலிருந்தே ரோசியின் மீது அப்படி ஒரு காதல் ஜெகனிற்கு. சிறு வயதிலிருந்தே ரோசியிடம் காதலை சொல்லியும் எந்த பதிலும் கிடைக்காததால் தன் பெற்றோரை கட்டாயப்படுத்தி சம்மந்தம் பேச வைத்திருந்தான் ஜெகன். தன் தங்கை மேரியிடம் எப்போதும் ரோசியை பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பான் ஜெகன். மேரியும் தன் அத்தை வேம்பின் வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் ஒப்பித்து விடுவாள்.

சற்று நேரத்திலெல்லாம் வீட்டின் வாசலில் மேரியும் கையில் ஒரு பொதியோடு வந்து “அண்ணா தர சொன்னாங்க ” என சொல்லி சென்றாள். அவளை உள்ளே அழைத்தும் எதோ வேலை இருப்பதாகச்சொல்லி சென்று விட்டாள் மேரி. செய்தி தாளில் பொதிந்த பொதியல் அது. என்ன பொருள் என்று ஒன்றும் விளக்கவில்லை வேம்புவிற்கு. அருகே ரோசியும் ஆர்வத்தோடே அதை பார்த்தபடி நின்றிருந்தாள். ஒன்றும் புரியாமல் திறந்து பார்த்த வேம்புவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

அந்த பேப்பர் பொதியலில் ஐநூறு ரூபாய் கட்டுகள் வீதம் நான்கு கட்டுகள் அடுக்கி இருந்தது. அதை பார்த்த உடனே என்ன செய்வது என தெரியாமல் சிறிது நேரம் மாறி மாறி இருவரும் முகங்களை பார்த்தபடி இருந்தனர். சற்று நேரத்தில் அருகிலிருந்த கை பேசியை எடுத்து ஏற்கனவே அழைப்பு வந்த எண்ணிற்கு மகளிடம் சொல்லி அழைத்து, ஜெகனிடம் விளக்கம் கேட்க நினைத்து ” மோன எதுக்கு இந்த பணம்…ஒண்ணும் சொல்லாட்டயே..?” என ஒன்றும் புரியாமல் பதட்டத்துடன் பேசினாள் வேம்பு. மறு முனையில் “அத்தை அந்த பணத்தை வச்சு கல்யாண வேலைய பாருங்க…அது எனக்க பணம் தான்.வேற யாருக்கும் தெரியாண்டாம்.” என அழுத்தமாக சொன்னான் ஜெகன். ஜெகனின் பேச்சு ரோசியின் காதுகளில் தெளிவாக கேட்டது.

இப்போது அருகில் இருந்த தாயின் முகத்தை உற்று பார்த்தாள் ரோசி. பதிலேதும் பேசாமல் அமைதியாக, கண்களில் ஆனந்த கண்ணீரோடு பழைய கிளாரம்மாவாக மாரி இருந்தாள் வேம்பு.

– ஸ்டனி சேவியர்.
கடியபட்டிணம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*