*6.3 லட்சம் டன் கணவாய் மீன்கள்* அறிவிப்புக்குப் பின் இருக்கும் அபாயம்

*கடல் மீன்வள ஆய்வு மைய விஞ்ஞானி டாக்டர் சுனில்முகமது* குழுவினர் கடலில் முக்குளித்து குமரி முதல் கேரளா வரையுள்ள அரபிக்கடல் பகுதியில் 100 முதல் 150 கடல்மைல் பகுதிகளில் 6.3 லட்சம் டன் கணவாய் மீன்கள் இருப்பதாக எண்ணியும் எடைபோட்டும் சொல்கிறார்கள்.

6.3 லட்சம் டன் கணவாய் மீன்களும் நிர்கதியாக  அந்த 100-150 கடல் மைலுக்கு உட்பட்ட 50 கடல் மைல்களிலிருந்து வெளியேற முடியாமல் தத்தளிப்பது போலவும் அங்கிருந்து எங்களை பிடித்துச் செல்லுங்கள்; சிறைபிடித்து வைக்கப்பட்ட எங்களை விடுதலை செய்யுங்கள் என்று  CMFRI விஞ்ஞானிகளிடம் கெஞ்சியதன் அடிப்படையிலும் 150 கடல்மைல் வரை மீனவர்களுக்கு சென்று சிறைபட்டிருக்கும் அந்த 6.3 லட்சம் டன் கணவாய் மீன்களை மீட்க முடியாததால் *பாவப்பட்ட சர்வதேச கப்பல் முதலாளிகளுக்கு இந்திய அரபிக்கடலில் மீன்பிடிக்க அனுமதி* வழங்கி விடுதலை கேட்கும் கணவாய் மீன்களை மீட்கும் உன்னத பணியை மத்திய அரசு செய்ய முனைந்திருப்பதாக செய்தி வருகிறது.

  அரபிக் கடலில் மீன்பிடிக்கும் குமரி மாவட்ட – கேரள மீனவர்கள் 50 கடல் மைலுக்கு உள்தான் கணவாய் மீன் பிடிக்கிறார்கள். அதற்கு மேலுள்ள பகுதிகளில் நிராதரவாக நிற்கும் 6.3 லட்சம் கணவாய் மீன்களை கார்ப்பரேட் கம்பெனிகளின் கப்பல் வந்தால்தான் முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்கிறார்கள்.ஆனால் குமரி மாவட்ட, கேரள மீனவர்கள் 400-500 கடல்மைல்வரை தொழில் செய்கிறார்கள். எங்கு எந்த மீன் இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்து அதிகமாக மீன் இருக்கின்ற யாருமே மீன்பிடிக்கச் செல்லாத *டீக்கோகார்சியா* தீவுவரை சென்று மீன்பிடிக்கும் வேட்டைச் சமூகமான மீனவ சமூகத்தை தேசத் துரோகிகளாக சித்தரித்து அங்கிருந்து துரத்தியடித்துவிட்டு பிடிக்கப்படாமலிருக்கும் மீனைப் பிடிக்க சர்வதேச கப்பல்களை அனுமதிக்க முடிவுசெய்யும் அரசும் அதிகாரிகளும்  பாரம்பரிய மீனவர்களிடம் கேட்டால் 50-60 கடல்மைல்களுக்கு உட்பட்ட பகுதியில்தான் நல்ல கணவாய் மீன்கள் இருப்பதாகவும் அதற்குமேல் கணவாய் மீன்கள் அதிகமாகக் கிடைப்பதில்லை என்றும் சொல்கிறார்கள். *CMFRI* கணவாய் மீன்களைக் கண்டுபிடித்தால் அந்த இடத்தை பாரம்பரிய மீனவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் அள்ளிக்கொண்டு வருவார்கள்.

ஏற்கனவே மத்திய அரசு *மீனாகுமாரி அறிக்கை* என்று ஒன்றைக் கொண்டுவந்து இந்தியக் கடலில் உள்ள மீன்வளங்களில் 20% மட்டும்தான் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது. 80% வீணாகப்போகிறது என்று சொல்லி அன்னிய கப்பல்களுக்கு அனுமதி அளித்தார்கள். அந்த கப்பல்கள் முக்கி முக்கி மீன்பிடித்து 9000 டன் மீன்களைத்தான் கணக்கு காட்டினார்கள். பாரம்பரிய மீனவர்கள் பிடித்த மீனின் அளவு 60000 டன். மீனவர்கள் போராடி மீனாகுமாரி அறிக்கையை தூக்கி எறிந்து வெளிநாட்டுக் கப்பல்களை விரட்டி அடித்தார்கள்.

மீனாகுமாரி அறிக்கையில் மூக்கறுபட்ட மத்திய அரசு இப்போது வேறொரு வழியில் வந்து கடல் வளங்களை பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிக்க அனுமதி வழங்கத் துடிக்கிறது.

இப்போது குமரிமாவட்ட -கேரள மீனவர்கள் 50 கடல்மைல்களுக்குள்ளாலிருந்து அதிகமான கணவாய் மீன்களைப் பிடித்து வருகிறார்கள். மீனவர்களின் இந்த மீன்பிடிப்பு பன்னாட்டு முதலாளிகளின் லாப வெறிகொண்ட கோரமூக்கை வேர்க்கச் செய்ததால் *CMFRI* விஞ்ஞானிகளைப் பிடித்து 100-150 கடல்மைலில் யாரும் பிடிக்காமல் வீணாய் கிடக்கும் கணவாய் மீன்களைப் பிடிக்க அனுமதி பெற்றுவிட்டு மீனவர்கள் 50 கடல்மைலில் பிடிக்கும் கணவாய் மீன்களை *சக்திவாய்ந்த விளக்குகள்-பெலாஜிக் வலைகளை* பயன்படுத்திப் பிடிக்கத் திட்டமிடுகிறார்கள்.

கடலில் எல்லையோ , வேலியோ இல்லாத போது, மீனவர்கள் மீன்பிடிக்கும் இடங்களில் அத்துமீறி நுழைந்து மீனவர்களின் விசைப்படகுகளை இடித்து கடலுக்குள் மூழ்கடித்து சாகடிக்கும் வேலைகளை சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருக்கும் கப்பல்களை பாதுகாத்து வழியனுப்பும் இந்திய நாட்டின் சட்டங்கள் வெளிநாட்டுக் கப்பல்களை மீனவர்கள் மீன்பிடிக்கும் இடத்திற்கு வராதே என்று எப்படித் தடுக்க முடியும்.

மொத்தத்தில் பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமையைத் தடுக்க அவர்களின் வாழ்வாதாரமான மீன்வளத்தைக் கொள்ளையடிக்க மீனவர்களை கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் துரத்தியடிக்க கார்ப்பரேட் முதலாளிகளும் மத்திய அரசும் மத்திய கடல்வள ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்தும் கூட்டுசதிதான் இந்த  *6.3 லட்சம் டன் கணவாய் மீன்*  

இந்த சதிவேலையை இந்திய மீனவர்கள் இணைந்து நின்று எதிர்ப்பார்கள். மீனாகுமாரி அறிக்கையை துரத்தியதுபோல் சுனில்  முகமதுவின் அறிக்கையையும் தூக்கி எறியச் செய்வார்கள்.

*குறும்பனைபெர்லின்*

குறும்பனைபெர்லின்
குறும்பனைபெர்லின்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*