‘வர்ளம்’ ஓர் அனுபவம்!.. (நூல் விமர்சனம்)

'வர்ளம்' ஓர் அனுபவம்

முட்டம் S. வால்டர், தான் எழுதிய “வர்ளம்” நாவலை எனக்கு வாசிக்கக் கொடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். அந்த நூலுக்கு அவர் ‘கடற்கரை விருது’ வாங்குதற்கென நாகர்கோவில் வந்திருந்தபோது சந்திக்க நேர்ந்ததன் விளைவுதான் அந்நிகழ்வு. ஆனால், அந்த நூலின் பக்கங்களைக் கடந்து சென்ற ஒரு வாசகன் என்ற நிலையில், என்னைத் தழுவிக்கொண்ட பிரமிப்பினை என்னால் ஒரு தற்செயல் நிகழ்வாகப் பார்க்க முடியவில்லை..


வெகுவாகப் பாதித்துவிட்ட ஒரு வாசிப்பு அனுபவம் இது என்பதா, விழுதூன்றி நிற்கும் ஒரு விருட்சமே இந்த நாவலுக்குள் கருக்கொண்டு கிடக்கிறது என்பதா, நெய்தல் படுகைகட்கு நம்மையெல்லாம் இழுத்துச் செல்கின்ற மேலும் ஒரு படைப்பாளன் இதோ கிடைத்துவிட்டான் என்பதா, சொல்லத் தெரியவில்லை..

அஞ்சாங் கிளாஸ்கூடத் தாண்டியிராத ஓர் அடல்மற மீனவனின் நெஞ்சாங் கூட்டினின்று கிளம்புகின்ற நெருப்புப் பிழம்புகள் இங்கே நிரல்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிழம்பிலும் நெய்தல் மண்ணின் வீரியம் சுடுகின்றது. ஒரு கடற்கரைக் கதைசொல்லியின் யதார்த்த லாவகம், தனது கவித்துவச் சொற்றொடர்கள் சகிதம் காட்சி தருகின்றது..

கதையோட்டம் தொடக்கம் முதலே சூடுபிடித்துவிடுகிறது. காரணம், கடல் சேலுகேட்டையும் பொருட்டாக மதியாது புறப்பட்டுச் செல்லும் மீனவனின் பொருள் பொதிந்த போர்க்குணம்தான் வாசகனுக்கு அறிமுகம் ஆகிறது. சிலுவை என்னும் இளைஞனின் தொலைநோக்கும், தொழில் திறனும், முட்டம் ஊரில் அவனுக்கு இருக்கும் நற்பெயரும் சற்றும் மிகையின்றி எழுத்தில் தரிசனம் தருகின்றன.

ஒக்கிப் புயலின் ஓலங்கள் நம் கண்ணெதிரே விரிகின்றன. மீனவனின் உயிர் எத்துணைத் துச்சம் என்பதை வெளிப்படையாகக் காட்டிய அரசுகளைத் துணிச்சலோடு தோலுரிக்கும் வால்டர், சந்தேகத்துக்கு இடமின்றி சபாஷ் பெறத் தகுதி படைத்தவர்.

வசந்தியின் காதலும், கதையோடு அதன் இழையோடலும் மிகமிக இயல்பாக இருப்பது வரவேற்கத்தக்கது. ஏனென்றால், இக்காலத்து நாவல்களில் பெரும்பாலான பெண் கதாபாத்திரங்கள் சற்றேனும் விரசமில்லாது சித்திரிக்கப்படுவதில்லை. வசந்தியின் இறுதிக் கட்டம், கதையின் இறுதிக் கட்டத்தையே கச்சிதமும் கண்ணியமும் கலந்துலாவச் செய்திருப்பது, கதாசிரியர் வால்டரின் தூரிகைத் திறமென்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது. 

நூலின் வரிகளிடையே அழகழகான தமிழ்ச் சொற்சித்திரங்கள் நம்மை ஈர்க்கின்றன. “வீழ்வதுகூட வென்றிடத்தான்” என்பதும், “வான வீதியில் ஊரடங்கு உத்தரவால் ஒரு வெள்ளியும் காணவில்லை” என்பதும், “கண்ணிலே நீர் கொண்டு எழுதினால் அங்கே அடிமைத்தனம் நீச்சல் கற்றுக்கொள்ளும்” என்பதும் சாதாரண வார்த்தைகளா? வால்டர் என்னும் மீனவனின் ‘வர்ள’த் தமிழ் அல்லவா?..

தம்பி வால்டர்.. உனது வருகை குறித்துப் பெருமிதம் கொள்ளும் எண்ணிறந்த நெய்தல் நெஞ்சங்களோடு என்னையும் இணைத்துக் கொள்கிறேன். நல்லதொரு நாவலை எம்முன் நடமாட விட்டமைக்கு இந்த நெய்தற் பெருவெளி உனக்கு நிரம்பவும் கடன்பட்டுக் கிடக்கிறது.

பாராட்டுகள். வணக்கம்!

– கவிஞர் தொ. சூசை மிக்கேல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*