நம் நெய்தல் – இதழ் அறிமுக நிகழ்வு

 

சென்னையில் ஜனவரி 9 முதல் 21 ம் தேதி வரை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற  43 வது சென்னை புத்தகக் காட்சியில்,  18-1-2010 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கருப்பு பிரதிகள் அரங்கில் வைத்து நம் நெய்தல் மாத இதழ் அறிமுக நிகழ்வு நடைபெற்றது .
பாவேந்தர் பாரதிதாசன் சிங்காரவேலரைப் பற்றி இயற்றிய பாடலை பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் தோழர் பாலா.  தமிழர்களின் மரபைத் தேடித் தேடி ஆவணப்படுத்தி வரும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவி முனைவர் சுபாஷினி “நம் நெய்தல்” இதழை வெளியிட,  பத்திரிகையாளர் ஹேமா ராகேஷ் பெற்றுக்கொண்டார். மைக்கல் ரோஷித் வியானி , ரோஷினி, ஹெல்ஜின், ரஜித் டானியோ ,  யோபு, மோனிஷா ஆகிய இளைய நெய்தல் எழுத்தாளர்கள்  வெளியிடும்  ”நம் நெய்தல்” இதழைப் பற்றி சுபாஷினி அறிமுகவுரை வழங்கினார். உப்பைக் கடல் அமிழ்தம் என்பதும் கடல்படு திரவியங்களில் ஒன்றான உப்பைக் கையாளும் நெய்தல் நில மாந்தரை உமணர் என்பதும் பற்றிய குறிப்புகளை இந்த இதழ் தாங்கி வந்திருப்பதைப் பற்றி எடுத்துச் சொன்னார். அதேபோன்று  நெய்தல் உணவு உலகளாவிய தன்மை கொண்டது. அதைப் பிரதிபலிக்கும் விதமாக நெய்தல் அடுக்களை பகுதியும் இதழில் இடம்பெற்றிருப்பதைக் கவனப்படுத்தினார். நெய்தலின் தனித்தன்மையுள்ள வட்டாரச் சொற்கள் பாதுகாக்கப்படவும் இதுபோன்ற இதழ் முயற்சிகள் உறுதுணையாக இருக்கும் என்பதைப் பதிவு செய்தார் சுபாஷினி. நெய்தல் நில இளையவர்களின் தமிழ் ஆர்வமும் எழுத்துத் திறனும் போற்றுதலுக்குரியது என்று பத்திரிகையாளர் ஹேமா ராகேஷ் பேசினார். நெய்தல் நிலத்தின் இளம்பெண்கள் சரிபாதியாக பங்கேற்றுள்ள இந்த இதழ் முயற்சி தொடர்வதற்கு வாழ்த்தினார். தொடர் சுரண்டலுக்குள்ளாகி வரும் மீனவர்களின் சமூகம் எழுச்சி பெறுவதன் அடையாளம்தான் இந்த இதழ் என்ற ஊடகவியலாளர் அசீஃப். இந்த இதழ் ஓர் இயக்கமாக பரந்து விரிய வேண்டும் என்று வாழ்த்தினார். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து “கடலார்”, “அலைகள்”, “புரட்சிக் கயல்” என்று நடந்த பல நெய்தல் இதழ்களின் தொடர்ச்சிதான் “நம் நெய்தல்” என்ற வழக்குரைஞர் லிங்கன். தலைச்சுமட்டு மீன் வியாபாரம் செய்யும் பெண்களின் கதைகளில் ஒன்றை “பாவமும் பழியும்” என்ற தலைப்பில் நம் நெய்தல் இதழ் வெளியிட்டுள்ளதைப் பற்றி மகிழ்ச்சியை வெளியிட்டார் . இந்தப் பெண்களின் கதைகள் சக உழைக்கும் பெண்களின் கதைகளோடு இணைக்கப்பட வேண்டுமென்று சொன்னார் லிங்கன். இப்போது. காம் பீர் முகமது அவர்கள் நம் நெய்தல் இதழின் படைப்புகளை பற்றி கூறி  வாழ்த்துரை வழங்கினார் . தமிழக மக்களின் இளைப்பாறுதலுக்காக மெரினா கடற்கரையைத் தக்க வைத்தது மீனவ மக்களின் வீரம் செறிந்த போராட்டம்தான் என்பதும் இந்த நிகழ்வில் நினைவூட்டப்பட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*