கண் முன்னே கடலில் மூழ்கியத மீன்பிடி படகு மீனவர்கள் அதிர்ச்சி!

புதுச்சேரியில் மீன்பிடி படகில் ஏற்பட்ட ஓட்டையால் மீனவர்கள் கண் முன்னே படகு மூழ்கிய சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான ரூ.70 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி விசைப்படகில் 8 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அதிகாலை 4 மணிக்குத்தான் மீன்பிடிக்கும் பணியைத் தொடங்குவார்கள் என்றாலும், அந்த நேரத்தில் கடலின் நீர்மட்டம் குறைவாக இருக்கும் என்பதால் முதல்நாள் இரவு 9 மணிக்கே கடலுக்குள் சென்று நங்கூரமிட்டு படகை நிறுத்துவது இவர்களின் வழக்கம். அந்த வகையில் நேற்று வீராம்பட்டினத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், அசோக், சாமிநாதன், பிரசாந்த், பாஸ்கர், முத்துக்குமரன், முனியாண்டி, கந்தவேல் ஆகியோர் கடலுக்குள் சென்றனர்.சின்ன முதலியார் சாவடி கடல் பகுதியில் படகை நிறுத்திவிட்டு உறங்கிய மீனவர்கள், அதிகாலை 4 மணிக்கு வலைகளை வீசத் தயாரான போது, படகின் எஞ்சின் பகுதியில் ஓட்டை ஏற்பட்டு கடல்நீர் உள்ளே வேகமாகப் புகுந்துகொண்டிருந்ததால், கொஞ்சம் கொஞ்சமாகப் படகு கடலுக்குள் மூழ்க ஆரம்பித்தது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கிராமத்தில் இருந்த மற்ற மீனவர்களை செல்போனில் தொடர்புகொண்டு தகவல் அளித்தனர். விபரீதத்தை உணர்ந்த கிராமத்து மக்கள் உடனே இந்தியக் கடலோர காவல்படையை அணுகி உதவி கேட்டனர்.

இதனிடையே தகவலறிந்த சக மீனவர்கள் மீட்பு படகை எடுத்துக்கொண்டு செல்வதற்குள் அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சின்ன முதலியார் சாவடி மீனவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மீனவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சில நிமிடங்களில் அந்த மீன்பிடி விசைப்படகு முழுவதுமாகக் கடலில் மூழ்குவதைப் பார்த்த மீனவர்கள் பதறிப் போனார்கள். படகு போனாலும் பரவாயில்லை உயிர் தப்பியதே என தப்பித்த மீனவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*